ஜெருசலம்: ஈரான் மீது புதிய கட்ட தாக்குதலை தொடங்கியுள்ளதாகவும், 80க்கும் மேற்பட்ட போர் விமானங்களை அனுப்பி அலை, அலையாக தாக்குதல் நடத்தி வருவதாகவும் இஸ்ரேல் அறிவித்துள்ளது.

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்தும் தாக்குதல் இன்னும் நிறைவடையவில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ள நிலையில், ஈரான் சரண் அடைவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், ஈரான் தனது எதிர்தாக்குதலை தீவிரப்படுத்தி வருவதாகவும், அதே நேரத்தில் இஸ்ரேல் முன்பை விட வேகமாக தாக்குதல்களை முன்னெடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இஸ்ரேல் ராணுவத்தின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, ஈரானின் உள்கட்டமைப்பை குறிவைத்து இந்த விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன. குறிப்பாக தலைநகர் டெஹ்ரான் மற்றும் மத்திய பகுதியில் உள்ள இஸ்பஹான் நகரில் உள்ள உள்கட்டமைப்புகள் சேதமடைந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

தாக்குதலால் இஸ்பஹானில் சுமார் 80 வீடுகள் சேதமடைந்ததாக தகவல் கூறுகிறது. மேலும் டெஹ்ரான் அருகே உள்ள மெஹ்ராபாத் விமான நிலையம் மீது தாக்குதல் நடந்ததாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.