மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், உலகை சில நாடுகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய காலம் முடிந்துவிட்டதாகவும், எதிர்காலம் “மேலும் மல்டிபோலர்” ஆக இருக்கும் என்றும் தெரிவித்தார். டில்லியில் நடைபெற்ற புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார மாநாட்டில் அவர் உரையாற்றினார்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்தியா எடுத்த நடவடிக்கைகள், சர்வதேச அரங்கில் இந்தியாவின் ‘வளரும் நாடு’ என்ற அடையாளத்தை வெளிப்படுத்தியதாக அவர் கூறினார். நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கியதுடன், பிற வளரும் நாடுகளுக்கும் தடுப்பூசிகளை அனுப்ப முன்வந்ததையும் அவர் குறிப்பிட்டார்.

முன்பு கலாசாரம், அரசியல், உத்திகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஒருங்கிணைந்ததாகத் தோன்றிய வளர்ந்த நாடுகள், தற்போது தங்களுக்குள் வேறுபாடுகளை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சர்வதேச அரசியல் இனி சில சக்திவாய்ந்த நாடுகளின் கட்டுப்பாட்டில் மட்டும் இல்லை; பல அதிகார மையங்கள் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக ஜெய்சங்கர் கூறினார். குறிப்பிட்ட தேவைகள் மற்றும் விவகாரங்களுக்காக நாடுகள் தற்காலிக கூட்டணிகளை அமைக்கும் போக்கு அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், சில நாடுகள் ஒப்பந்தங்களை அமைத்து மற்ற நாடுகள் அதற்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும் என்ற பழைய நடைமுறைக்கு உலகம் இனி திரும்பாது என்றும் அவர் கூறினார். தற்போதைய அதிகாரப் பரவலுக்கு ஏற்ப சர்வதேச ஒத்துழைப்பு மாற வேண்டுமே தவிர, அதை எதிர்க்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.