சென்னை: சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே நடந்த விபத்தில் நிறைமாத கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, திமுகவினரை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், திமுக கொடி கட்டிய கார் அதிவேகமாகச் சென்று இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை மோதியதாக வெளியான தகவல்களை குறிப்பிட்டார். இந்த விபத்தில் கர்ப்பிணிப் பெண் உயிரிழந்தது குடும்பத்தாரை துயரத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

“திமுககாரன்” என்ற போர்வையில் நடைபெறும் அராஜகங்கள் தொடர்வதாக குற்றம்சாட்டிய நயினார், இது கடும் கண்டனத்திற்குரியது மட்டுமல்ல, பெரும் ஆபத்தானதும் என தெரிவித்தார். ஆட்சி முடிவுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் அதிகார மமதையால் மேலும் எத்தனை பேர் பாதிக்கப்படுவார்களோ என்ற அச்சத்தில் மக்கள் இருப்பதாகவும் அவர் கூறினார்.

அகலமான சாலையில் ஓரமாகச் சென்றவர்களின் மீது கார் மோதும் அளவுக்கு அலட்சியம் காட்டப்பட்டதாக விமர்சித்த அவர், ஒரே நேரத்தில் இரண்டு உயிர்கள் பறிபோனதாகக் கூறி, இதற்கு காரணமானவர்களை மனிதாபிமானம் மிக்க தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என தெரிவித்தார்.