காத்மாண்டு: நேபாளத்தில் நடந்து முடிந்த பார்லிமென்ட் தேர்தலில், 35 வயதான பாலேந்திர ஷா தலைமையிலான தேசிய சுதந்திர கட்சி (ஆர்.எஸ்.பி.) தெளிவான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று அடுத்த ஆட்சியை அமைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு செப்டம்பர் 26-ல் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடை, இளைஞர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஊழல், வேலைவாய்ப்பின்மை, அரசியல் வாரிசுகளின் சொகுசு வாழ்க்கை போன்ற நீண்டகால அதிருப்திகளுடன் இது இணைந்து, மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தாங்களாகவே ஒருங்கிணைந்து போராட்டங்களை முன்னெடுத்தனர்.

தலைநகர் காத்மாண்டுவில் மைதிகர் மண்டலா பகுதியில் ஆயிரக்கணக்கானோர் பார்லிமென்ட் நோக்கி பேரணி நடத்தினர். போராட்டத்தை கட்டுப்படுத்த பாதுகாப்புப் படைகள் களமிறக்கப்பட்ட நிலையில், மோதல் வெடித்து வன்முறையாக மாறியது. அரசு கட்டடங்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் வீடுகள் தீக்கிரையானதாகவும், வன்முறையை தடுக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 76 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த பின்னணியில் பிரதமர் கே.பி. சர்மா ஒலி தலைமையிலான அரசு ராஜினாமா செய்தது. தொடர்ந்து, நேபாளத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி சுசீலா கார்கி தலைமையில் இடைக்கால அரசு பொறுப்பேற்று, சமூக வலைதளத் தடையை நீக்கியது.

தேர்தலில் நேபாள காங்கிரஸ் சார்பில் ஷேர் பஹதூர் துாபா, நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) தலைவர் சர்மா ஒலி, நேபாள கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் புஷ்ப கமல் பிரசண்டா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் போட்டியிட்டனர். ஆனால் ஓட்டு எண்ணிக்கை போக்கில் ஆர்.எஸ்.பி. முன்னிலை பெற்றது. மொத்தம் 275 இடங்களில் 165 தொகுதிகளில் நேரடி தேர்தல் நடந்த நிலையில், மீதமுள்ள 110 எம்.பி.க்கள் பிரதிநிதித்துவ அடிப்படையில் நியமிக்கப்படுவர். நேற்றிரவு நிலவரப்படி ஆர்.எஸ்.பி. 110-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிப்பதாகவும், ஜாப்பா-5 தொகுதியில் சர்மா ஒலியை பாலேந்திர ஷா பின்னுக்கு தள்ளி முன்னிலை பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.