கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு வியாழக்கிழமை ஊட்டி செசன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணை நீடிப்பது குறித்து நீதிபதி கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீதிபதி முரளிதரன் முன்னிலையில் நடந்த விசாரணையில், கேரளாவின் வாளையார் மனோஜ் நேரில் ஆஜரானார். மேலும் சி.பி.சி.ஐ.டி., ஏ.டி.எஸ்.பி. முருகவேல் தலைமையிலான போலீசாரும் நீதிமன்றத்தில் முன்னிலையினர்.
அரசு தரப்பு வழக்கறிஞர் கனகராஜ் கூறுகையில், இதுவரை இந்த வழக்கில் 269 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றுள்ளதாக நீதிமன்றத்துக்கு தெரிவிக்கப்பட்டதாக கூறினார்.
இதையடுத்து, வழக்கு ஏன் இன்னும் நிலுவையில் உள்ளது, எப்போது முடிக்கப்படும் என நீதிபதி புலன் விசாரணை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு, குஜராத்தில் உள்ள தடயவியல் ஆய்வகத்திலிருந்து ஒரு அறிக்கை வர வேண்டியிருப்பதால் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து வழக்கை ஏப்ரல் 24-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.




