இஸ்லாமாபாத்: ஈரானைச் சுற்றியுள்ள மோதல் சூழல் காரணமாக எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்த நிலையில், பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்துவதாக கூறப்படும் நிலையில், அதற்கு பதிலடியாக கச்சா எண்ணெய் கப்பல்கள் செல்லும் ஹார்முஸ் ஜலசந்தி கடற்பாதையை ஈரான் முடக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற பயம் பரவி, மக்கள் ஒரே நேரத்தில் பெட்ரோல் நிலையங்களுக்கு குவிந்தனர்.

இந்த சூழலை பயன்படுத்தி சில பெட்ரோல் பங்குகள் செயற்கையாக தட்டுப்பாடு உருவாக்கி எரிபொருளை பதுக்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பல நகரங்களில் மக்கள் அவதியடைந்ததுடன், அரசின் மீது அதிருப்தியும் அதிகரித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, செயற்கை தட்டுப்பாடு உருவாக்கும் நிலையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார். அத்தகைய பங்குகளின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், மூடி சீல் வைத்து சட்ட நடவடிக்கை தொடரப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.55 உயர்ந்து ரூ.321.17 ஆக (17% உயர்வு) விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலையும் லிட்டருக்கு ரூ.55 உயர்ந்து ரூ.335 ஆக (20% உயர்வு) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பெட்ரோலிய அமைச்சகம், நாட்டில் 28 நாட்களுக்கு தேவையான பெட்ரோல்-டீசல் இருப்பும், 10 நாட்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் இருப்பும், 15 நாட்களுக்கு தேவையான சமையல் எரிவாயு இருப்பும் உள்ளதாக கூறி, மக்கள் பீதியடைந்து அதிகமாக வாங்கி சேமிக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.