திருவனந்தபுரம்: கேரளா சென்றுள்ள காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் மாணவியுடன் இணைந்து களறி பயிற்சியில் ஈடுபட்டார்.
கொல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய பின்னர், அவர் குட்டிக்கானம் பகுதியில் உள்ள மரியம் கல்லூரிக்கு சென்று மாணவர்களுடன் கலந்துரையாடினார். மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
அப்போது ஆசிரியர்கள், தற்காப்புக் கலை பயிற்சி பெற்ற மாணவர்கள் அதை செய்து காட்டலாம் என்றும், அதை பார்க்க ராகுல் ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து தினாஸ்ரீ என்ற மாணவி கேரளாவின் பாரம்பரிய தற்காப்புக் கலையான களறியை செய்து காட்டினார்.
மாணவி கேட்டுக்கொண்டதற்கிணங்க, அவர் காட்டிய அசைவுகளைப் போல ராகுலும் முயன்று செய்தார். பின்னர் தினாஸ்ரீ, தற்காப்புக் கலைகள் குறித்து அவர் விருப்பம் காட்டியதாகவும், அவர் நன்றாக செய்ததாகவும், அவர் யோகாவையும் தொடர்ந்து செய்து வருவதை அறிந்ததாகவும் கூறினார்.
நிகழ்ச்சியில் உடனிருந்த காங்கிரஸ் எம்பிக்கள் கே.சி. வேணுகோபால் மற்றும் தியான் குரியகோஸ் ஆகியோரும் களறி பயிற்சியில் ஈடுபட முயன்றனர்; ஆனால் அவர்களால் முடியவில்லை.




