யு.பி.எஸ்.சி. 2025 சிவில் சர்வீசஸ் தேர்வின் இறுதி முடிவுகளை நேற்று வெளியிட்டது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட 23 சேவைகளுக்கான இந்தத் தேர்வில், மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்த ராஜேஸ்வரி சுவீ தேசிய அளவில் 2-ம் இடம் பிடித்து கவனம் பெற்றுள்ளார்.

2025 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஆண்டு ஜனவரி 22-ம் தேதி வெளியிடப்பட்டது. முதல்நிலைத் தேர்வு 79 நகரங்களில் 2025 மே 25-ம் தேதி நடைபெற்றது; 7 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதினர். முதல்நிலை முடிவுகள் ஜூன் 11-ம் தேதி வெளியாக, தமிழகத்தைச் சேர்ந்த 723 பேர் உட்பட மொத்தம் 14,156 பேர் தேர்ச்சி பெற்றனர்.

அதனைத் தொடர்ந்து முதன்மைத் தேர்வு ஆகஸ்ட் 22 முதல் 31 வரை நடைபெற்றது. நவம்பர் 11-ம் தேதி வெளியான முதன்மைத் தேர்வு முடிவில், தமிழகத்தைச் சேர்ந்த 155 பேர் உட்பட 2,756 பேர் நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றனர். நேர்முகத் தேர்வு இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது.

இறுதி முடிவுகளின்படி, ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் மாவட்டத்தைச் சேர்ந்த அனுஜ் அக்னிஹோத்ரி தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். சண்டிகரைச் சேர்ந்த அகான்ஷ் துல் மூன்றாம் இடம் பெற்றார். தமிழகத்தைச் சேர்ந்த ராஜா முகைதீன் தேசிய அளவில் 7-ம் இடம் பிடித்துள்ளார்.

யு.பி.எஸ்.சி. அறிவிப்பின்படி, ஐ.ஏ.எஸ். 180, ஐ.எப்.எஸ். 55, ஐ.பி.எஸ். 150, குரூப் ஏ 507, குரூப் பி 195 என மொத்தம் 1,087 காலிப் பணியிடங்கள் உள்ளன. நேர்முகத் தேர்வு அடிப்படையில் 958 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 60 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்; முதன்மைத் தேர்வை தமிழில் எழுதிய அருண் குமார் 585-வது இடம் பெற்றுள்ளார். மேலும், தேர்ச்சி பெற்ற 60 பேரில் 56 பேர் தமிழக அரசின் ‘நான் முதல்வன்’ ஊக்கத் தொகை பயிற்சி திட்டத்தில் பயன் பெற்றதாக திறன் மேம்பாட்டு கழகம் தெரிவித்துள்ளது; இதில் 39 பேர் ‘நான் முதல்வன்’ மற்றும் அகில இந்திய குடிமைப்பணி பயிற்சி மையம் இணைந்து நடத்திய உறைவிடப் பயிற்சியில் பயிற்சி பெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது.