வாஷிங்டன்: அமெரிக்காவில் வசிக்கும் ஈரானிய பட்டத்து இளவரசர் ரெசா பஹ்லவி, ஈரானில் அதிகார மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் தன்னை அழைக்கிறார்கள் என்று தெரிவித்தார். அந்த பொறுப்பை ஏற்கிறேன் என்றும், நாட்டையும் வெளிநாட்டு உறவுகளையும் இயல்பு நிலைக்கு கொண்டு வர மக்கள் உத்தரவிட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
தன் அறிக்கையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், கத்தார், குவைத், ஓமன், ஜோர்டான், ஈராக் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தியதாக அவர் குற்றம்சாட்டினார். அண்டை நாடுகளின் இறையாண்மையை மீறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது; அது கண்டனத்துக்குரியது என்றும் தெரிவித்தார்.
கடந்த ஐந்து தசாப்தங்களாக “பயங்கரவாத ஆட்சி” இந்த பிராந்தியத்தில் ரத்தக்களறியும் குழப்பமும் உருவாக்கியதாக அவர் கூறினார். சிரியாவில் ஆசாத் அரசுக்கு ஆதரவு, லெபனானில் ஹிஸ்புல்லா வளர்ச்சி, அரேபிய தீபகற்பத்தில் ஸ்திரத்தன்மையை குலைக்க ஹவுதிகளுக்கு ஆயுத உதவி, ஈராக் இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் நடவடிக்கைகள் மற்றும் சவுதி அரேபியா, ஐ.அ. எமிரேட்ஸின் பொருளாதார மையங்களை தாக்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவை ஈரானிய மக்களின் விருப்பம் அல்ல; நாட்டை ஆக்கிரமித்துள்ள ஆட்சியின் விருப்பம் தான் என்று அவர் கூறினார். ஈரானிய புரட்சிக்கு முன்பு அரபு தலைவர்களுடன் ஈரான் நெருக்கமாக இணைந்து செயல்பட்டதை நினைவூட்டிய அவர், மீண்டும் “உண்மையான கூட்டாளி” ஆக முடியும் என்றும், அரபு உலகில் உள்ள நண்பர்கள் தங்களுடன் இணைந்து இடைக்கால அரசை அங்கீகரிக்க தயாராக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.




