டெஹ்ரான்: ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர்பான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்யா ஈரானுக்கு முக்கிய ரகசிய உளவுத் தகவல்களை வழங்கியதாக வட்டாரங்கள் கூறுகின்றன.

பிப்ரவரி 28 முதல் நடைபெறும் இந்தப் போர் தற்போது எட்டாவது நாளை எட்டியுள்ளதாகவும், நாளுக்கு நாள் தாக்குதல்கள் அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்காசியாவில் உருவான பதற்றம் வளைகுடா நாடுகளிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

போர் நிறுத்தப்பட வேண்டும், பதற்றம் குறைய வேண்டும் என்று ரஷ்யா வலியுறுத்தி வந்த நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேற்று ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் பேசினார். அந்த உரையாடலில், ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததாக செய்தி குறிப்பிடுகிறது.

அசோசியேட்டட் பிரஸ் மேற்கோள் காட்டிய உளவுத் தகவலின்படி, ஈரானைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கும் அமெரிக்கப் போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களை கண்காணித்து தாக்குவதற்கு உதவும் வகையில் அந்த தகவல்கள் இருக்கலாம். இந்தப் போர் தொடங்கிய பிறகு, ஈரானுக்கு ஆதரவாக ரஷ்யா தன்னை முதன்முறையாக ஈடுபடுத்திக் கொண்டதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

இதற்கு பதிலளித்த அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத், யார் யாருடன் பேசுகிறார்கள் என்பதை அமெரிக்க அதிபர் நன்கு அறிவார் என்றும், இத்தகைய “தேவையற்ற விஷயங்கள்” வலுவாக எதிர்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.