சென்னை: இளைஞர்கள் மத்தியில் சினிமா மோகம் அதிகரிப்பதற்கு ஆட்சியாளர்களே காரணம் என நாம் தமிழர் கட்சி (நா.த.க.) தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
பேட்டியில், வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் நா.த.க. தனித்து போட்டியிடுவதில் உறுதியாக இருப்பதாகவும், திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்றும் கூறினார்.
தன்னுடன் கூட்டணிக்கு யாரும் வரமாட்டார்கள் எனக் குறிப்பிட்ட அவர், ஓட்டுக்கு பணம் கொடுக்கும் அரசியல் பண்பாட்டை ஏற்காத கட்சிகள் வந்தால் மட்டுமே கூட்டணி குறித்து சிந்திக்க முடியும் என்றார். பணம் கொடுத்து பெறும் வெற்றியை இழிவான அரசியல் எனவும் விமர்சித்தார்.
த.வெ.க. தலைவர் விஜய் கரூர் செல்லவில்லை என்றால் கூட்டம் கூடாது; உயிரிழப்பும் நடந்திருக்காது என சீமான் கூறினார். கரூர் சம்பவத்துக்கும் தன்னுக்கும் தொடர்பில்லை என்ற விஜயின் விளக்கத்தை ஏற்க முடியாது என்றும், தெரியாமல் நடந்தது; அதற்கு நானும் பொறுப்பாகிவிட்டேன் என்று மன்னிப்பு கேட்டிருந்தால் பிரச்சினை முடிந்திருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், கல்வி நிறுவனங்களில் அரசியல் பேச தடை விதித்து விட்டு சினிமா நட்சத்திரங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பது சமூக சீர்கேடு என விமர்சித்தார். மாநில உரிமை பேசும் தி.மு.க., அந்த உரிமையை பறித்ததாக அவர் கூறும் காங்கிரசுடன் கூட்டணி வைத்திருப்பதாகவும் சீமான் குற்றம்சாட்டினார்.




