கொழும்பு: இந்தியப் பெருங்கடலில் இலங்கை அருகே பயணித்த ஈரான் கடற்படையின் ‘ஐ.ஆர்.ஐ.என்.எஸ். புஷெர்’ போர்க்கப்பலில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து, மனிதாபிமான அடிப்படையில் அந்தக் கப்பலை தங்கள் கடற்பகுதிக்குள் வர இலங்கை அரசு அனுமதி வழங்கியது.
இதே நேரத்தில், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருவதாகவும், ஏழாம் நாளாகவும் தாக்குதல் நீடித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், இந்தியாவில் இரண்டு நாள் கடற்படை பயிற்சியை முடித்து திரும்பிய ‘ஐரிஸ் டீனா’ என்ற ஈரான் போர்க்கப்பல் தாக்குதலில் அழிக்கப்பட்டதாகவும், அதில் இருந்த 87 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், இலங்கை அருகே சென்ற ‘புஷெர்’ கப்பலும் தாக்குதலுக்குள்ளாகலாம் என்ற அச்சம் எழுந்தது. 100க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் பயணித்த கப்பலின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இலங்கை கடல் எல்லைக்குள் அனுமதிக்க ஈரான் கோரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்பட்டது.
உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசித்த பின்னர், இலங்கை அதிபர் திசநாயகே மனிதாபிமான காரணங்களுக்காக அனுமதி அளித்ததாக இலங்கை கடற்படை தெரிவித்தது. கடற்படை செய்தித் தொடர்பாளர் கமாண்டர் புத்திக சம்பத் கூறுகையில், கப்பலில் இருந்த 208 ஈரானியர்களில் 204 பேர் கொழும்பு துறைமுகத்துக்கு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டதாகவும், நான்கு மாலுமிகள் மட்டும் கப்பலிலேயே தங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஈரான் கப்பல் கிழக்கு துறைமுகமான திரிகோணமலையை அடைய சுமார் இரண்டு நாட்கள் ஆகும் என்றும் அவர் கூறினார்.




