தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி உறுதியாகியிருந்தாலும், தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதற்கு முன் நடந்த பேச்சுவார்த்தைகளில் தேர்தல் நிதி தொடர்பாக கடுமையான விவாதம் ஏற்பட்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முந்தைய தேர்தல்களில் தமிழகத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களின் பிரசாரச் செலவுகளில் பெரும்பகுதியை தி.மு.க. ஏற்றுக்கொள்வது வழக்கமாக இருந்ததாகவும், செலவுகள் லட்சங்களில் இருந்து கோடிகளாக உயர்ந்துள்ள நிலையில் வரும் சட்டசபைத் தேர்தலிலும் அதேபோல் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கை காங்கிரஸ் தரப்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால், காங்கிரஸ் தேர்தல் குழுவினருடன் நடந்த உரையாடலில், கடந்த தேர்தலைப் போல அதிகமாக செலவு செய்ய முடியாது; ஓரளவுக்குத்தான் செய்ய முடியும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்ததாகவும், அதனால் காங்கிரஸ் தரப்பில் ‘பசை’ உள்ளவர்களை வேட்பாளர்களாக தேர்வு செய்யுமாறு அவர் வலியுறுத்தியதாகவும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
இதைக் கேட்டு காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரீஷ் ஷோடங்கர் அதிர்ச்சி அடைந்ததாகவும், தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட கசப்பு காரணமாக நிதியை குறைப்பதாக கூறக் கூடாது என அவர் வாதிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தமிழகத்தில் தற்போது எம்.எல்.ஏ.க்களாக உள்ள பெரும்பாலானோருக்கு மீண்டும் சீட் வழங்கப்படும் என்றும், செலவின் சுமார் 20% மட்டுமே அவர்கள் ஈடுசெய்ய முடியும்; மீதியை வழக்கம்போல தி.மு.க. செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியதாக தகவல்.
இதற்கு பதிலளித்த ஸ்டாலின், செலவுத் தொகையை விட வெற்றி பெறக்கூடிய, தொகுதியில் செல்வாக்கு உள்ளவர்களை மட்டுமே வேட்பாளர்களாக்குவது முக்கியம் என வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. பலவீனமான வேட்பாளர்களால் ஏற்படும் தோல்விகள் எதிர்க்கட்சிக்கு பலம் சேர்க்கும் என்பதால் தகுதியானவர்களை அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறியதாக தகவல். இதை கட்சி மேலிடத்தில் தெரிவிப்பதாக ஷோடங்கர் கூறியதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.




