‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் 2030ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் மொத்தம் 7 லட்சம் வீடுகள் கட்டப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை அறிவித்தார். இதில் கிராமங்களில் 5 லட்சமும், நகரங்களில் 2 லட்சமும் கட்டப்படும் என அவர் கூறினார்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்ட நிறைவு விழாவில், “தமிழ்நாடு – 2030 கனவுகள் மெய்ப்படும்” என்ற தலைப்பில் அவர் உரையாற்றினார். 1.80 லட்சம் குடும்பங்களிடம் அவர்களின் கனவுகள் குறித்து கேட்டறியப்பட்டதாகவும், அவற்றில் முக்கியமானவற்றை முன்னிலைப்படுத்தி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான 14 முக்கிய முயற்சிகள் அறிவிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
சுகாதாரத் துறையில் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய் ஆகியவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்றும், அனைத்து மாவட்டங்களிலும் மனநல ஆலோசனை மையங்கள் அமைக்கப்படும் என்றும் முதல்வர் கூறினார்.
விவசாயத் துறையில் நிகர சாகுபடி பரப்பை 50 லட்சம் ஹெக்டேராக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், 43 லட்சம் விவசாயிகளுக்கு மண் வள அட்டை வழங்கப்படும் என்றும், 1.25 லட்சம் பேருக்கு விவசாய உபகரணங்கள் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
கல்வி மற்றும் திறன் மேம்பாட்டில் ‘இடைநிற்றல் இல்லா கல்வி கனவு 2030’ திட்டத்தின் மூலம் மாணவர்கள் பள்ளிப் படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்வது உறுதி செய்யப்படும் என்றும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ‘ஸ்மார்ட்’ வகுப்பறைகள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் ‘லைப்ரரி 5.0’ முறையில் 300 நூலகங்கள் நவீனமயமாக்கப்படும், ‘வெற்றி பள்ளிகள்’ திட்டத்தில் 1,000 மாடல் பள்ளிகள் திறக்கப்படும், 2030க்குள் உயர் கல்வி சேர்க்கை விகிதம் 90% எட்டும் வகையில் கட்டமைப்புகள் விரிவாக்கப்படும், ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் ஏ.ஐ. ஆய்வகங்கள் அமைக்கப்படும் எனவும் கூறினார்.




