வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன், திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஈடுகொடுக்கக்கூடிய மாற்று கூட்டணி தமிழகத்தில் இதுவரை உருவாகவில்லை என்று தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் இதை கூறினார்.

திமுக தரப்பு ஒவ்வொரு கட்சியையும் தனித்தனியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், தங்களையும் விரைவில் அழைப்பார்கள் எனவும் அவர் கூறினார். கூட்டணி கட்சிகளுக்கிடையேயான ஒத்துழைப்பு சுமுகமாக நடைபெறுகிறது என்றும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகள் அதிர்ச்சி அடையும் அளவுக்கு திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக செயல்படுகிறது என அவர் கூறினார். மேலும் பல புதிய கட்சிகள் இணைந்து கூட்டணியை மேலும் வலுப்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.

மக்களின் ஆதரவுடன் வரும் தேர்தலில் கூட்டணி மகத்தான வெற்றியை பெறும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். நடிகர் விஜய் புகழ்பெற்றவர் என்பதால் ஊடகங்கள் அவருக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கின்றன என்றும் கூறினார்.

விஜயால் தமிழக அரசியல் தலைகீழாக மாறும் என்ற தோற்றத்தை திட்டமிட்டு உருவாக்குகிறார்கள் என அவர் குற்றம்சாட்டினார். தமிழக மக்கள் அரசியல் விழிப்புணர்வு கொண்டவர்கள்; கடந்த காலங்களில் போல சினிமா மயக்கத்தில் வாக்களிக்கும் சூழல் இப்போது இல்லை என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.