2026 தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், கட்சிகளில் விருப்பமனு அளித்த அரசியல்வாதிகள் பலர், போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் ஜோதிட ஆலோசனையும் கோவில் வழிபாடுகளையும் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அ.தி.மு.க., தி.மு.க. ஆகியவை தேசிய, மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில், த.வெ.க. கூட்டணி அமைக்க முயற்சிப்பதாகவும், நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணியை தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் நான்கு முனை போட்டி உருவாகும் சூழல் இருப்பதால், ஒவ்வொரு கட்சியிலும் ‘சீட்’ பெறும் போட்டி தீவிரமாகியுள்ளது.

சில சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் சீட் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் குலதெய்வம் மற்றும் பரிகார கோவில்களுக்கு சென்று வழிபடுவதாகவும், சிலர் ஜோதிடர்களின் ஆலோசனையுடன் கேரள நம்பூதிரிகளை அழைத்து மந்திர உச்சாடன வழிபாடுகளை நடத்துவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

மேலும், உறவினர்கள் மூலம் புகைப்படம், ஜாதகத்தை கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள காளி கோவிலுக்கு அனுப்பி அங்கு சிறப்பு பூஜை செய்யப்படுவதாகவும், அப்போது வழங்கப்படும் தகட்டை பாக்கெட்டில் வைத்தால் நினைத்தது நடக்கும், சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவுவதாகவும் கூறப்படுகிறது. சேலம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் சென்று பிரபல ஜோதிடர்கள் மற்றும் கேரள பிரசன்ன ஜோதிடர்களிடம் முன் அனுமதி பெற்று ஜாதகங்களை கொடுத்து பரிகாரங்களையும் கேட்கிறார்கள் எனவும் தகவல்.

சனி பெயர்ச்சி நாளில் சிவன் கோவில்களில் பரிகார பூஜைகள் செய்ததாகவும், முக்கிய கோவில்களுக்கும் வாடகை மற்றும் நண்பர்களின் கார்களில் சென்று வழிபட்டதாகவும் கூறப்படுகிறது. சில ஜோதிடர்கள் கூறியதாக வெளியான தகவலில், அரசியல் வெற்றிக்கு சுக்கிரன் மற்றும் சூரியன் ஆதிக்கம் முக்கியம் என்பதால் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், மதுரை மீனாட்சி, சங்கரன்கோவில் கோமதி அம்மன் போன்ற கோவில்களுக்கு வருகை அதிகரித்துள்ளதாகவும், சனி பெயர்ச்சிக்குப் பின் பிரபலங்கள் மற்றும் குடும்பத்தினர் வருகை மேலும் உயரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.