சென்னை: தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் மத்தியில் சின்னம்மை மற்றும் ‘மம்ப்ஸ்’ எனப்படும் பொன்னுக்கு வீங்கி பாதிப்பு அதிகரித்துள்ளதாக அரசு மருத்துவர்கள் தெரிவித்தனர். குளிர் காலம் முடிந்து வெயில் காலம் தொடங்கும் பருவமாற்றத்துடன் இந்த வைரஸ் தொற்றுகள் அதிகம் காணப்படுவதாகவும் அவர்கள் கூறினர்.
தற்போது பருவநிலை மாற்றம் காரணமாக வெப்பம் உயர்ந்து வருவதால் குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்களில் இந்த நோய்கள் பரவும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் விளக்கினர்.
சின்னம்மை எளிதில் பரவும் வைரஸ் தொற்று நோய். காய்ச்சல், உடல் சோர்வு, தளர்ச்சி, பசியின்மை போன்ற அறிகுறிகளுடன் தொடங்கி, பின்னர் உடலில் சிறிய கட்டிகள்/குமிழ்கள் உருவாகும். கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகலாம் என்பதால் இந்தப் பருவத்தில் கூடுதல் கவனம் தேவை என மருத்துவர்கள் எச்சரித்தனர்.
பொன்னுக்கு வீங்கி ஏற்பட்டவர்களுக்கு கன்னத்துக்கு கீழே மற்றும் கழுத்தின் ஒரு பக்கம் அல்லது இரு பக்கங்களிலும் வீக்கம் காணப்படும்; இது பொதுவாக ஓரிரு வாரங்களில் தானாகவே குணமாகலாம். ஆனால் கணையத்தை தாக்கி அதீத வயிற்று வலி ஏற்படுத்தலாம்; பெண் குழந்தைகளில் சினைப்பையில் அழற்சி ஏற்பட்டு அடிவயிற்றில் கடும் வலி வரலாம்; ஆண் குழந்தைகளில் விதைகளில் அழற்சி ஏற்பட்டு வலி உண்டாகலாம் என்றும் மருத்துவர்கள் கூறினர்.
மேலும், வைரஸ் தண்டுவட நரம்புகளை தாக்கி மூளை வரை பரவினால் கழுத்து இறுக்கம், பிதற்றல் நிலை, கடுமையான தலைவலி, மயக்கம் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். இருமல், தும்மல், மூக்கொழுகுதல், சளி வழியாக தொற்று பரவுவதால் பொதுஇடங்களில் முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவுதல் மற்றும் குறைந்தது ஒரு வாரம் தனிமையில் இருப்பது நல்லது என அறிவுறுத்தினர்.




