புதுடில்லி: இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்கா தனது தேசிய நலன்களுக்கே முன்னுரிமை அளிக்கும் என்றும், சீனாவுடன் நடந்த அனுபவத்தில் செய்த தவறுகளை மீண்டும் செய்யமாட்டோம் என்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் கிறிஸ்டோபர் லாண்டோ தெரிவித்தார்.
டில்லியில் நடைபெற்ற ‘ரெய்சினா’ மாநாட்டில் பேசிய அவர், சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் சீனாவுக்கு அமெரிக்க சந்தையை திறந்து விட்டது “மிகப் பெரிய தவறு” எனக் குறிப்பிட்டார். அந்தப் பிழையை மீண்டும் செய்யமாட்டோம் என்பதை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
எந்த ஒப்பந்தமும் அமெரிக்க மக்களின் நலனை முதன்மையாகக் கொண்டே அமையும் என்றும், சீனாவைப் போல இந்தியா போட்டியாளராக மாறுவதை அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார்.
அதே நேரத்தில், ‘அமெரிக்காவுக்கே முன்னுரிமை’ என்பது அமெரிக்கா தனித்து செயல்படும் என்பதல்ல; பிற நாடுகளுடன் இணைந்து செயல்படுவதன் மூலமே இலக்குகளை அடைய முடியும் என்றும் அவர் விளக்கினார். தேசிய நலன் என்பது அனைத்து நாடுகளுக்கும் பொதுவான கொள்கை என்றார்.
வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன; விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனவும் லாண்டோ தெரிவித்தார்.




