தமிழகத்தின் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் ரூ.500 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டி, இதுகுறித்து விசாரணை நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், வேளாண் விற்பனைத் துறையின் கீழ் 27 மாவட்ட விற்பனைக் குழுக்கள் செயல்படுகின்றன என்றும், அவற்றின் கட்டுப்பாட்டில் 284 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மற்றும் 13 துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் இயங்கி வருகின்றன என்றும் குறிப்பிட்டார். விவசாயிகளின் விளைபொருட்களை மறைமுக ஏலத்தின் மூலம் விற்பனை செய்து அதிக விலை கிடைக்கச் செய்வதே இக்கூடங்களின் நோக்கம் என்றும் அவர் கூறினார்.
வணிகர்கள் வாங்கும் பொருட்களின் மொத்த மதிப்பில் 1% சந்தை கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், அந்த வசூல் தொகையைச் சார்ந்தே பெருமளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். வணிகர்களுடன் கூட்டணி அமைத்து விவசாயிகளுக்கு குறைவான கொள்முதல் விலை கிடைக்கச் செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுக்காக ரூ.5 லட்சத்திற்குக் குறைவான தொகையை விற்பனைக் குழுக்களே செலவழிக்கலாம் என்ற அரசாணை ஊழலுக்கான வாயிலாக மாறியுள்ளதாக அவர் கூறினார். ஒவ்வொரு குழுவிலும் உள்ள தொகையை ரூ.5 லட்சம், ரூ.5 லட்சம் எனப் பிரித்து பல்வேறு பணிகளுக்குச் செலவிட்டதாகக் காட்டி பணம் சுருட்டப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
தமிழகம் முழுவதும் கடந்த நான்காண்டுகளில் ரூ.500 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருக்கலாம் என விவசாயிகள் குற்றஞ்சாட்டுவதாக கூறிய அன்புமணி, இதுகுறித்து அரசு விசாரணை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.




