மெல்போர்ன்: நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஆதெர்ன் குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு குடியேறியுள்ளார். தொழிலாளர் கட்சி சார்பில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பிரதமராக பதவி வகித்த அவர், வேலைவாய்ப்பு வாய்ப்புகளை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
தகவலின்படி, நியூசிலாந்தில் இருந்த தனது வீட்டை விற்று, அந்த தொகையை கொண்டு மெல்போர்னில் அதைவிட பெரிய வீட்டை வாங்கியுள்ளார். தற்போது கணவர் மற்றும் குழந்தைகளுடன் அங்கு குடியேறியுள்ளார்.
நியூசிலாந்து குடிமக்கள் வெளிநாடுகளுக்கு செல்லுவது புதிதல்ல என்றாலும், முன்னாள் பிரதமரும் நீண்ட காலம் எம்.பி.யாக இருந்தவரும் வேலைவாய்ப்பை முன்னிட்டு இடம்பெயர்வது கவனம் ஈர்த்துள்ளது. ஆஸ்திரேலியாவில் ஜெசிந்தாவின் கணவருக்கு நியூசிலாந்தை விட சுமார் 50% அதிக சம்பளத்தில் வேலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் குறிப்பிடப்படுகிறது.
மேலும், நியூசிலாந்தை விட ஆஸ்திரேலியாவில் குடும்பச் செலவுகள் குறையும் என்ற கணக்கீடும் இந்த இடம்பெயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.
கடந்த நான்கு ஆண்டுகளாக நியூசிலாந்தில் இருந்து வெளிநாடுகளுக்கு குடிபெயரும் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 2025ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 1,22,000 பேர் வெளிநாடுகளுக்கு சென்றதாகவும், இது முந்தைய ஆண்டை விட 4% அதிகம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. வெளிநாடு செல்லுபவர்களில் சுமார் 60% பேர் ஆஸ்திரேலியாவை தேர்வு செய்கிறார்கள். தற்போது ஆஸ்திரேலியாவில் சுமார் 6,70,000 நியூசிலாந்து நாட்டவர்கள் வசிப்பதாகவும், இது நியூசிலாந்தின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 12.5% என்றும் குறிப்பிடப்படுகிறது.




