புதுடில்லி: மேற்காசியாவில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக வர்த்தகம் பாதிக்காமல் இருக்க, இந்திய ஏற்றுமதியாளர்களுக்கான சில விதிகளில் தற்காலிக தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
வெளிநாட்டு வர்த்தகத்துக்கான பொது இயக்குநரகம் (DGFT) வெளியிட்ட அறிக்கையில், சமீபத்திய புவிசார் அரசியல் மாற்றங்களால் சர்வதேச கப்பல் போக்குவரத்து பாதைகள் மற்றும் உலகளாவிய விநியோக அமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது. இதன் பின்னணியில், வரியின்றி இறக்குமதி செய்யும் திட்டங்களில், குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட அளவு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற நிபந்தனையில் தளர்வு அளிக்கப்படுகிறது.
அதன்படி, 2026 மார்ச் 1 முதல் மே 31 வரை காலாவதியாக இருந்த ஏற்றுமதி காலக்கெடு, வரும் ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த நீட்டிப்புக்கு எந்த அபராதமும் விதிக்கப்படாது என DGFT கூறியுள்ளது.
அமெரிக்காவின் அதிக வரி விதிப்பால் ஏற்கனவே ஏற்றுமதியாளர்கள் அழுத்தத்தில் உள்ள நிலையில், அமெரிக்கா–இஸ்ரேல் நாடுகள் ஈரானுக்கு எதிராக போரிடுவது கப்பல் மற்றும் விமான கட்டணங்கள், காப்பீட்டு பிரீமியம் ஆகியவற்றை உயர்த்தியுள்ளதாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது நீடித்தால் இந்திய பொருட்களின் விலை போட்டித்தன்மை பாதிக்கக்கூடும் என்பதால் இந்த சலுகை அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




