ஜனாதிபதி திரவுபதி முர்முவின் டார்ஜிலிங் மாவட்டப் பயணத்தின் போது அவமதிப்பு ஏற்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக மேற்கு வங்க அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் அவசர அறிக்கை கேட்டுள்ளது. இன்று மாலை 5 மணிக்குள் மாநில தலைமைச் செயலாளர் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தகவலின்படி, டார்ஜிலிங் மாவட்டம் கோசைப்பூரில் சர்வதேச சந்தால் சமூக மாநாடு நடைபெற்றது; இதில் ஜனாதிபதி கலந்து கொண்டார். மாநாடு முதலில் பன்சிதேவாவின் பிதான்நகரில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கடைசி நேரத்தில் கோசைப்பூருக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கு அதிகமான மக்கள் கூட முடியாத சூழல் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜனாதிபதியை வரவேற்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் அமைச்சர்கள் யாரும் வரவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, இடமாற்றம் ஏன் நடந்தது, தன்னை வர அனுமதிக்கவில்லை என்றால் காரணம் என்ன என்பதுபோன்ற கேள்விகளை ஜனாதிபதி எழுப்பியதாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க அரசு மற்றும் திரிணமுல் காங்கிரஸ் ஜனாதிபதியை அவமதித்ததாக குற்றம்சாட்டினார். இந்நிலையில், உள்துறை செயலர் கோவிந்த் மோகன், தலைமைச் செயலாளர் நந்தினி சக்கரவர்த்தியிடம், முதல்வர், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், டிஜிபி ஏன் வரவில்லை என்பதையும், ஜனாதிபதிக்காக அமைக்கப்பட்ட கழிவறையில் தண்ணீர் இல்லாதது, மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்த பகுதியில் குப்பை இருந்தது போன்ற குறைபாடுகள் குறித்தும் விளக்கம் கேட்டுள்ளார்.
மேலும், டார்ஜிலிங் மாவட்ட கலெக்டர், சிலிகுரி போலீஸ் கமிஷனர் மற்றும் கூடுதல் மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோர் பொறுப்பாளர்கள் என குறிப்பிடப்பட்ட நிலையில், அவர்கள்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பதையும் இன்று மாலை 5 மணிக்குள் தெரிவிக்க வேண்டும் என நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.




