மேற்காசியாவில் நீடிக்கும் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது. பீஜிங்கில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ இதை தெரிவித்தார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான்மீது நடத்திய தாக்குதலால் உருவான இந்தப் போர் “ஒருபோதும் நடந்திருக்கக் கூடாது” என அவர் கூறினார். ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் மோதலை உடனடியாக நிறுத்தி, சுமுகமான பேச்சுவார்த்தைக்கு உடனே திரும்ப வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

போர் 9வது நாளாக தொடரும் நிலையில், ஈரான் முழுவதும் ஏவுகணைத் தாக்குதல் தீவிரமடைந்துள்ளதாகவும், பதிலடியாக மேற்காசியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை ஈரான் தாக்கி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பதற்றமான சூழல் நீடிக்கிறது.

மேலும், இந்த ஆண்டு சீன-அமெரிக்க உறவுகளுக்கு முக்கியமானதாக இருக்கும் என்றும், சீனாவுடனான வேறுபாடுகளை அமெரிக்கா களைந்து கொள்ள வேண்டும் என்றும் வாங் யீ கூறினார். சிக்கலான சர்வதேச சூழலுக்கு மத்தியில் சீனா-ரஷ்யா உறவுகள் உறுதியாகவும் அசைக்க முடியாததாகவும் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.