புதுடில்லி: தி.மு.க.-காங். கூட்டணி ஒருவழியாக இறுதியாக முடிவடைந்துள்ளது. இதை நிறைவேற்றுவதில் முன்னாள் மத்திய அமைச்சர் பி. சிதம்பரம் முக்கிய பங்கு வகித்ததாக காங். வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கூட்டணி தொடர வேண்டும் என்பதில் சிதம்பரம் உறுதியாக இருந்ததாகவும், நடிகர் விஜய் பக்கம் காங். செல்லக்கூடாது என்ற நிலைப்பாட்டில் அவர் முயற்சி எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த உடன்பாடு 28 சட்டசபை தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் என்ற அளவில் முடிவானதாக தகவல்.

ஆனால் இந்த முடிவு ராகுல் காந்திக்கு திருப்தியளிக்கவில்லை என கூறப்படுகிறது. சிதம்பரத்துடன் ஏற்கனவே கருத்து வேறுபாடு உள்ள நிலையில், ‘28 சீட் மட்டும் போதுமா; இரண்டு ராஜ்யசபா சீட் பெற்றிருக்க வேண்டும்’ என அவர் கேள்வி எழுப்பியதாக வட்டாரங்கள் சொல்கின்றன.

இந்த விவகாரம் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி இடையிலும் மனக்கசப்பை உருவாக்கியதாக காங். மூத்த தலைவர்கள் கூறுகின்றனர். சிதம்பரம் நேரடியாக சோனியாவிடம் பேசி ஒப்புதல் பெற்றதாகவும், தி.மு.க. உடனான கூட்டணி தொடர வேண்டும் என்று சோனியா உறுதியாக கூறியதாகவும் தகவல்.

மேலும், தனிப்பட்ட அணுகுமுறையிலும் மாற்றம் தெரிகிறது என கூறப்படுகிறது. 10 ஜன்பத் இல்லத்தில் சிதம்பரத்திற்கு எப்போதும் வாயில் திறந்திருக்கும் நிலையில், சுனேரி பாக் பகுதியில் உள்ள ராகுலின் இல்லத்தில் அவருக்கான கதவுகள் மூடப்பட்டுவிட்டதாக காங். வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.