காஞ்சிபுரம் ஸ்ரீ தேவராஜசுவாமி (தேவராஜ பெருமாள்) கோவிலில் கும்பாபிஷேகத்துக்காக நடைபெறும் பணிகள் ஆகம விதிகளை மீறுகிறதா என்பதை ஆய்வு செய்ய, மாநில அளவிலான நிபுணர் குழு ஒரு துணைக் குழுவை அமைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகத்தைச் சேர்ந்த கிருஷ்ண தேவராய தாக்கல் செய்த மனுவில், புராதன சின்ன ஆணையத்தின் ஒப்புதல் பெறாமலும், ஆகம விதிகளைப் பின்பற்றாமலும் பணிகள் நடைபெறுகின்றன எனக் கூறி, கட்டுமான பணிகளுக்குப் பெறப்பட்ட ஒப்புதல்களை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். வழக்கு நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில், கருவறைக்குச் செல்ல இருந்த மரப் படிகள் ஆறிலிருந்து பத்தாக மாற்றப்பட்டதாகவும், கோவில் மேற்கூரையில் இருந்த தங்க பல்லி அம்சத்தை வைத்திருக்க ‘பால்ஸ் சீலிங்’ அமைத்து உயரம் குறைக்கப்பட்டதாகவும் கூறி, இவை ஆகம விதிகளுக்கு எதிரான மாற்றங்கள் என வாதிடப்பட்டது.
அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ். ராமன், தொல்லியல் துறை தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்ற மாநில நிபுணர் குழு பல கூட்டங்கள் நடத்திய பின்னரே பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார். படிகள் உயரமாக இருப்பதால் பக்தர்கள் சிரமப்படாமல் இருக்க சாய்தள பாதை அமைக்கப்பட்டதாகவும், படிகளில் ஏறி தரிசனம் செய்வது தடுக்கப்படவில்லை என்றும், பல்லி தொடர்பான மாற்றம் ஆகம விதிகளுக்கு முரணல்ல என்றும் தெரிவித்தார். மேலும், 90% பணிகள் முடிந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களாக பணிகள் முடங்கி உள்ளதாகவும் கூறினார்.
கோவிலில் சுவரோவியங்கள் இருப்பதால் இது பாரம்பரிய முக்கியத்துவம் வாய்ந்த கோவில் எனக் குறிப்பிட்ட நீதிமன்றம், ஆகம விதி மீறல் உள்ளதா என்பதை ஆகம மற்றும் தொல்லியல் நிபுணர்களே தீர்மானிக்க முடியும் என்றது. ஆகம நிபுணர்கள் மற்றும் தொல்லியல் துறை நிபுணர்கள் அடங்கிய துணைக் குழுவை அமைக்க மாநில நிபுணர் குழுவுக்கு உத்தரவிட்டு, அதில் ‘பாஞ்சராத்ர ஆகம’ நிபுணர் ஒருவர் கட்டாயம் இடம் பெற வேண்டும் எனவும் கூறியது. ஆய்வு தேதி கோவிலில் அறிவிக்கப்பட வேண்டும்; மனுதாரருக்கும் தகவல் தெரிவிக்கப்பட வேண்டும். அனைத்து தரப்பு ஆட்சேபனைகளையும் பரிசீலித்து எந்த பணிகளை தொடரலாம், எவற்றை தொடரக்கூடாது, எவற்றை மாற்றலாம் என்பதைக் குறித்து துணைக் குழு அறிக்கை அளிக்க வேண்டும்; அதன் அடிப்படையில் மாநில நிபுணர் குழு அடுத்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.




