பாட்னா: பீஹார் முதல்வர் நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமாரை, அடுத்த அரசில் துணை முதல்வராக நியமிக்க கட்சி ஒருமனதாக முடிவு செய்துள்ளதாக ஜே.டி.(யூ) தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதிஷ் குமாரின் நெருங்கிய உதவியாளரும் ஜே.டி.(யூ) எம்.எல்.ஏ-வுமான ஹரி நாராயண் சிங், நிதிஷ் குமார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பின் அமைக்கப்படும் புதிய அரசில் இந்த முடிவு அமலுக்கு வரும் என கூறினார். தற்போது பீஹாரில் ஜே.டி.(யூ)-பா.ஜ. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நிதிஷ் குமார் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருப்பது மாநில அரசியலில் திடீர் திருப்பமாக பார்க்கப்படுகிறது. அவர் ராஜ்யசபா எம்.பி. ஆனதும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வார் என்றும், அதன் பின் பா.ஜ. தலைமையில் புதிய அரசு அமைக்கப்படும் என்றும் செய்தி கூறுகிறது.

நேற்று பாட்னாவில் நடந்த ஜே.டி.(யூ) எம்.எல்.ஏ-க்கள் மற்றும் மேல்சபை உறுப்பினர்கள் கூட்டத்தில், நிஷாந்தை மேல்சபை உறுப்பினராக தேர்வு செய்து பின்னர் துணை முதல்வராக நியமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அடுத்த மாதம் மேல்சபையில் காலியாக உள்ள ஒன்பது இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளதாகவும், அதில் நிஷாந்த் போட்டியிட்டு வெற்றி பெறுவார் என்றும் ஹரி நாராயண் சிங் கூறினார்.

இதற்கிடையே, இன்று பாட்னாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் நிஷாந்த் ஜே.டி.(யூ) கட்சியில் முறைப்படி இணைவார் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் முன்னாள் முதல்வர் ரப்ரி தேவி, நிதிஷ் குமாருக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக குற்றம்சாட்டி, அவர் பீஹாரை விட்டு செல்லக் கூடாது என விமர்சித்துள்ளார்.