பாலக்காடு மாவட்டம் கோங்கோடு எம்.எல்.ஏ. சாந்தகுமாரியை மர்ம நபர்கள் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ என்ற பெயரில் மிரட்டி ஆன்லைன் மோசடி செய்ய முயன்றதாக புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, போலீசார் விசாரணை தொடங்கியுள்ளனர். மாவட்ட எஸ்.பி. அஜித்குமாரிடம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
எம்.எல்.ஏ. கூறியதன்படி, முதலில் வந்த அழைப்பில் பேசிய நபர் தன்னை பயங்கரவாத எதிர்ப்பு படையைச் சேர்ந்தவர் என கூறினார். காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுடன் தொடர்பாக பிடிபட்ட தீவிரவாதிகளிடமிருந்து அவரது எண் கிடைத்ததாக கூறி, ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மிரட்டும் தொனியில் பேசியதாக தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, திருவனந்தபுரம் சைபர் செல் தலைமையகத்திலிருந்து பேசுவதாக கூறி, எஸ்.ஐ. சுரேஷ்குமார் என்ற பெயரில் மற்றொருவர் மலையாளத்தில் தொடர்பு கொண்டதாகவும், தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி தனிப்பட்ட விவரங்களை கேட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
பின்னர், போலீஸ் சீருடை அணிந்தவர்கள் வீடியோ காலில் தோன்றி, விசாரணை முடியும் வரை தனி அறையில் இருக்க வேண்டும், யாரிடமும் பேசக்கூடாது என எச்சரித்ததாக கூறினார். அவர்கள் கேட்ட ஆவணங்கள் மற்றும் ஆதார் எண் உள்ளிட்ட சில விவரங்களை வழங்கிய பின்னர், மும்பையில் தனது பெயரில் வங்கிக் கணக்கு இருப்பதாகவும் அதில் உள்ள பணம் பயங்கரவாதச் செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் கூறியதால் சந்தேகம் ஏற்பட்டதாகவும், உடனே இணைப்பைத் துண்டித்ததாகவும் தெரிவித்தார்.
சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் நிபுண் சங்கர், சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக கூறினார். மேலும், ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ என்ற பெயரில் எந்த அதிகாரப்பூர்வ நடைமுறையும் இல்லை என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.




