கொல்கட்டா: மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற வேலைவாய்ப்பில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்படும் என முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகக் கூறி கொல்கட்டாவில் அவர் நடத்தி வரும் தர்ணாவில் பேசும்போது, 21 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களுக்கு சுயசார்புடன் முன்னேற உதவும் வகையில் இந்த உதவி வழங்கப்படும் என்றார்.

இந்த திட்டத்தை ஏப்ரல் 1-ல் தொடங்க திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் சர்வதேச மகளிர் தின பரிசாக உடனடியாக அமல்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார். கல்வி உதவித்தொகை தவிர மற்ற அரசு திட்டங்களின் பலன்களை பெறாத சுமார் 1 கோடி பேர் இதன் மூலம் பயனடைவார்கள் எனவும் தெரிவித்தார்.

மேலும், மாநிலத்தில் வேலையில்லா திண்டாட்டம் 40% குறைந்துள்ளதாகவும், ‘உத்கர்ஷ பங்களா’ திட்டத்தின் கீழ் 40 லட்சம் பேருக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட்டு 10 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார். 200 புதிய நிறுவனங்கள் வந்துள்ளதாகவும், சிறு-நடுத்தரத் தொழில்களில் மாநிலம் முதலிடத்தில் இருப்பதாகவும், பிர்பும் மாவட்டத்தில் உள்ள பெரிய நிலக்கரி சுரங்கம் மூலம் 1 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.