மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் செப்டம்பர் 17 அன்று நடைபெற உள்ளது. காலை 7:45 மணி முதல் 8:10 மணிக்குள் சடங்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கோயில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பது மரபு. மீனாட்சி அம்மன் கோயிலில் கடைசியாக 2009 ஏப்ரல் 8 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், அடுத்த சுற்று காலத்துக்குள் நடத்தப்பட வேண்டியது தாமதமானது.
2018 பிப்ரவரி 2 அன்று வீரவசந்தராயர் மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு பணிகளில் ஏற்பட்ட தாமதமே இதற்குக் காரணமாக கூறப்படுகிறது. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் திருப்பணிகள் தொடங்கப்பட்டு, கோயில் நிதி ரூ.15.81 கோடி மற்றும் உபயதாரர் நிதி ரூ.5.16 கோடி என மொத்தம் ரூ.32.28 கோடியில் 186 திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், வீரவசந்தராயர் மண்டபத்தை பழமை மாறாமல் சீரமைக்க ரூ.35.30 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடந்து வருவதாகவும், இம்மாத இறுதிக்குள் நிறைவடையும் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கும்பாபிஷேகம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கூடுதல் தலைமைச் செயலர் மணிவாசன், துறை கமிஷனர் ஸ்ரீதர், கோயில் இணை கமிஷனர் சுரேஷ், அறங்காவலர் குழு உறுப்பினர்கள், ஸ்தானிக பட்டர்கள் மற்றும் ராஜா பட்டர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மார்ச் இறுதிக்குள் பணிகள் முடிந்தாலும், சித்திரைத் திருவிழா உள்ளிட்ட தொடர்ச்சியான திருவிழாக்களுக்கு இடையூறு இல்லாமல் செப்.17 (ஆவணி 31) அன்று கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது.




