டில்லி மெட்ரோவின் இரண்டு புதிய வழித்தடங்களைத் திறந்து வைத்து, ரூ.18,300 கோடி மதிப்பிலான மெட்ரோ திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பின்னர் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்முவை திரிணமுல் காங்கிரஸ் அவமதித்ததாக குற்றம்சாட்டினார். அந்த நிகழ்வு “மனதை புண்படுத்தியது” என்றும் “மிகவும் வருத்தமளிக்கிறது” என்றும் அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய மோடி, மெட்ரோ விரிவாக்கம் முதல் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்களுக்கான வீட்டு வசதிகள் வரை பல திட்டங்கள் டில்லியில் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். டில்லியில் “இரட்டை இன்ஜின்” ஆட்சி அமைந்ததன் பலன்கள் வளர்ச்சிப் பணிகளில் பிரதிபலிப்பதாகவும் அவர் கூறினார்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், பெண்கள் அதிகாரமளிப்பில் புதிய அத்தியாயம் உருவாகி வருவதாக குறிப்பிட்டார். அரசியல், நிர்வாகம், அறிவியல், விளையாட்டு, சமூக சேவை உள்ளிட்ட துறைகளில் இந்தியாவின் “பெண் சக்தி” புதிய ஆற்றலுடன் முன்னேறி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் பழங்குடி சமூகத்தின் பெரிய நிகழ்ச்சியில் பங்கேற்க ஜனாதிபதி முர்மு சென்றதாக கூறிய மோடி, அந்த நிகழ்வையும் ஜனாதிபதியையும் கவுரவிப்பதற்குப் பதிலாக திரிணமுல் காங்கிரஸ் புறக்கணித்ததாக குற்றம்சாட்டினார். இது ஜனாதிபதிக்கு மட்டுமல்ல, நாட்டின் அரசியலமைப்புக்கும் ஜனநாயக மரபுகளுக்கும் அவமானம் எனவும் அவர் கூறினார்.