புதுடில்லி: இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் பெண்கள் அளிக்கும் பங்களிப்பை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை பாராட்டினார். பெண்களுக்கு மேலும் வாய்ப்புகளை உருவாக்குவதில் அரசு உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், இந்தியாவின் “பெண் சக்தி” சாதனைகள் பெருமைக்குரியவை என்றும், தேசத்தை கட்டியெழுப்புவதில் மாற்றத்தை ஏற்படுத்தும் பங்கு வகித்துள்ளன என்றும் தெரிவித்தார்.

இந்தியா மேலும் முன்னேறும் நிலையில், பெண்களின் விருப்பங்களும் பங்களிப்புகளும் வளமான தேசத்தை நோக்கிய பயணத்தை தொடர்ந்து வழிநடத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் அனைத்து பெண்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்த பிரதமர், ஒவ்வொரு துறையிலும் பெண்கள் ஒப்பிடமுடியாத வைராக்கியத்துடன் இந்திய முன்னேற்றத்திற்கு பங்களித்து வருவதாக கூறினார். அவர்களின் சாதனைகள் தேசத்திற்கு ஊக்கமாக இருப்பதாகவும் அவர் சொன்னார்.

பெண்களுக்கு அதிகாரமளிக்க பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், ஒவ்வொரு பெண்ணும் தனது முழுத் திறனை வெளிப்படுத்தி நாட்டின் வளர்ச்சியில் பங்களிக்க வாய்ப்புகளை உருவாக்க அரசு உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த பத்தாண்டுகளில் அடிமட்டத்தில் பெண்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் தெளிவாகத் தெரிகின்றன என்றும் அவர் கூறினார்.