வாஷிங்டன்: கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (சி.இ.ஓ.) சுந்தர் பிச்சையின் மொத்த ஊதியத் தொகுப்பு அடுத்த மூன்று ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் உயரக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவைச் சேர்ந்த பைனான்சியல் டைம்ஸ் வெளியிட்ட செய்தியின்படி, அவரது மொத்த தொகுப்பு ரூ.6,361 கோடி வரை செல்ல வாய்ப்புள்ளது. இதில் பெரும்பகுதி ரொக்கமாக வழங்கப்படாமல், பங்குகள் சார்ந்த வழங்கல்களாக இருக்கும் என கூறப்படுகிறது.

அவருக்கு சுமார் ரூ.1,000 கோடி மதிப்புள்ள கூகுள் பங்குகள் வழங்கப்பட உள்ளதாகவும், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு பங்குகள் வழங்கப்படுவதன் மதிப்பு சுமார் ரூ.700 கோடி எனவும் அந்த செய்தி குறிப்பிடுகிறது. அவரது ஆண்டு சம்பளம் மட்டும் ரூ.16 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், டிரைவர் இல்லா கார், ட்ரோன் மூலம் பொருட்கள் டெலிவரி போன்ற புதிய தொழில்நுட்பங்களின் வளர்ச்சியைப் பொறுத்து கூடுதலாக ரூ.2,900 கோடி மதிப்புள்ள பங்குகள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. 2015ல் அவர் பொறுப்பேற்ற போது கூகுளின் மதிப்பு ரூ.44 லட்சம் கோடியாக இருந்தது; தற்போது அது ரூ.300 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதையும், இந்த வளர்ச்சியை பாராட்டியே இந்த உயர்வு வழங்கப்படுவதாகவும் அந்த செய்தி சுட்டிக்காட்டுகிறது.