நடுத்தர குடும்பங்களும் கடற்கரையில் பிரமாண்டமாக திருமண நிகழ்ச்சிகளை நடத்தும் வகையில் ‘பீச் வெட்டிங்’ என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் திருமணங்களுக்கு ஆடம்பர மண்டபங்கள், நட்சத்திர ஹோட்டல்கள் போன்ற இடங்களே அதிகம் தேர்வு செய்யப்படுகின்றன. முக்கிய பிரமுகர்கள் மற்றும் பெரிய தொழிலதிபர்கள் கடற்கரை அருகிலுள்ள ரிசார்ட்களில் விழாக்களை நடத்துவதும் வழக்கமாக உள்ளது. ஆனால் இத்தகைய ஏற்பாடுகளுக்கு லட்சக்கணக்கில் செலவாகும் என்பதால், நடுத்தர மக்களுக்கு இது எட்டாத கனவாகவே இருந்து வந்தது.

இந்த நிலையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் (TTDC) சார்பில் ‘பீச் வெட்டிங்’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள TTDC அலுவலகத்தின் அனுமதியுடன் இனி கடற்கரையில் திருமணம் நடத்த முடியும்.

வெளிநாட்டு கலாசார பாணி நிகழ்ச்சிகளுக்கு மக்களிடையே ஆர்வம் அதிகரித்து வருவதாகவும், வழக்கமான சுற்றுலா திட்டங்களைத் தாண்டி கடற்கரை திருமண முறையை பலர் எதிர்பார்ப்பதாகவும் சுற்றுலாத் துறை அதிகாரிகள் கூறினர். தனியார் வாயிலாக இதுபோன்ற ஏற்பாடுகள் இருந்தாலும், அரசு சார்பில் குறைந்த விலையில் நடத்த முடியும் எனவும் தெரிவித்தனர்.

முதல் கட்டமாக, ஈசிஆர் பகுதியில் உள்ள மாமல்லபுரம் தமிழ்நாடு ஹோட்டல் ரிசார்ட்டில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வருகிறது. அங்குள்ள கடற்கரை மணல் வெளியில் திருமண நிகழ்ச்சிகளை நடத்தலாம். முன்பதிவு மற்றும் கூடுதல் தகவல்களுக்கு www.ttdconline.com இணையதளத்தை பார்க்கலாம்.