டாஸ்மாக் மது கடைகளில் பணிபுரியும் பணியாளர்களை நிரந்தரம் செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ்மாக் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் சென்னை எழும்பூரில் வெள்ளிக்கிழமை காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இதில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாக அமைப்பினர் தெரிவித்தனர்.

2003 முதல் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பதே முக்கிய கோரிக்கையாக அவர்கள் கூறினர்.

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி, அரசு உயரதிகாரிகள் அடங்கிய குழு அமைத்து அதன் அறிக்கையைப் பெற்று முடிவு எடுக்கப்படும் என முன்பே தெரிவித்ததாக போராட்டக்குழு நினைவூட்டியது. ஆனால் அந்த அறிக்கை வெளியிடப்படாததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

தேர்தல் தொடங்க உள்ளதால் தற்போது போராட்டத்தை முடித்துக் கொள்வதாகவும், தேர்தல் முடிந்து புதிய முதல்வர் பதவியேற்பு நாளில் கோரிக்கைகள் நிறைவேறவில்லை என்றால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் கூறினர்.

இதனிடையே, கிராம உதவியாளர்கள் தங்களுக்கு நான்காம் நிலைக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி பிப். 5 முதல் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக, வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பில் உள்ள 10க்கும் மேற்பட்ட சங்கத்தினர் மார்ச் 10 மற்றும் 11 தேதிகளில் தற்செயல் விடுப்பு எடுத்து அடையாள வேலைநிறுத்தம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.

மேலும், அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்ட குழு, மகப்பேறு துறையில் 57 பணியிடங்கள் காலியாக இருந்தும் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படவில்லை என கூறி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தலையிட்டு கலந்தாய்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. பச்சிளம் குழந்தை பிரிவுக்கான உயர் சிறப்பு மருத்துவர் பணியிடங்கள் உருவாக்குவதற்காக குழந்தைகள் நல மருத்துவர் பணியிடங்களை குறைக்கும் திட்டத்தையும் கைவிட வேண்டும் என அந்த குழு தெரிவித்துள்ளது.