தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் அட்டவணை மார்ச் 15 அல்லது 16ம் தேதி அறிவிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளின் ஒரு பகுதியாக தேர்தல் கமிஷன் ஆலோசனைகள் நடத்தி வருகிறது.

பிப்ரவரி 26, 27 தேதிகளில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் மற்றும் கமிஷனர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் தமிழகம், புதுச்சேரி வந்து தலைமை தேர்தல் அதிகாரி, தலைமைச் செயலர், டி.ஜி.பி. உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினர். அசாமில் ஆலோசனைகள் முடிந்துள்ள நிலையில், கேரளப் பயணம் சனிக்கிழமை நிறைவடைந்ததாக கூறப்படுகிறது.

நாளை முதல் இரண்டு நாட்கள் மேற்கு வங்கத்தில் தேர்தல் கமிஷன் பயணம் மேற்கொள்ள உள்ளது. அதன் பின்னர் மார்ச் 11ம் தேதி டெல்லியில் சமூக ஊடக நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது; இதன் பின் ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் அட்டவணை இறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

சட்டசபை தேர்தலுடன் சேர்த்து, பல மாநிலங்களில் காலியாக உள்ள லோக்சபா மற்றும் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களும் அறிவிக்கப்படலாம். மேற்கு வங்கத்தில் 5 முதல் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாகவும், தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் ஒரே கட்டமாக நடத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.