அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை கடுமையாக விமர்சித்து, “போரில் நாங்கள் ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டோம்; உங்கள் ஆதரவு தேவையில்லை” என்று தெரிவித்துள்ளார்.
டிரம்ப் வெளியிட்ட பதிவில், ஒருகாலத்தில் நெருங்கிய நட்பு நாடாக இருந்த பிரிட்டன், மத்திய கிழக்கு பகுதிக்கு இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்களை அனுப்புவது குறித்து தீவிரமாக யோசித்து வருவதாக கூறினார். இதையடுத்து, “நாங்கள் ஏற்கனவே வென்ற பிறகு உங்கள் ஆதரவு எங்களுக்கு தேவையில்லை” என ஸ்டார்மருக்கு நேரடியாக பதிலளித்தார்.
இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா வெற்றி பெற்று வருவதாகவும், போர் இன்னும் சில காலம் தொடரும் என்றும் கூறினார். ஈரான் அரசு “முழுமையாக அழிக்கப்பட்டது” எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், ஈரானின் கடற்படை மற்றும் விமானப்படை மீது தாக்குதல் நடத்தி 44 கப்பல்கள் உள்ளிட்டவை அழிக்கப்பட்டதாகவும், பெரும்பாலான ஏவுகணைகள் செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும் டிரம்ப் கூறினார். ஏவுகணை உற்பத்தி பகுதிகள் தாக்கப்பட்டதாகவும், ட்ரோன் உற்பத்தி திறன் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மினாப் பகுதியில் உள்ள ஈரான் பெண்கள் பள்ளி மீது நடந்த தாக்குதலுக்கு ஈரானே காரணம் என்றும், அதில் பல மாணவிகள் உயிரிழந்ததாகவும் டிரம்ப் குற்றம்சாட்டினார்.




