துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “திராவிட மாடல் ஆட்சி அனைத்து சமூகத்தினருக்கும் சமநிலையான வளர்ச்சியை வழங்கி வருகிறது” என்று தெரிவித்தார். அவர் தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினார்.
அந்நிகழ்ச்சியில் ரூ.136 கோடி மதிப்பில் கட்டப்பட்ட உயர் சிறப்பு மருத்துவமனையை அவர் திறந்து வைத்தார். மேலும் ரூ.110 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டம், முதல்வரின் காலை உணவுத் திட்டம் மூலம் 22 லட்சம் மாணவர்கள் பயன் பெறுவது உள்ளிட்டவற்றை அவர் குறிப்பிட்டார். சமீபத்தில் வெளியான யு.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகளில் தமிழக மாணவர்கள் முன்னிலை பெற்றிருப்பது ‘நான் முதல்வன்’ திட்டத்தின் வெற்றியை காட்டுவதாகவும் தெரிவித்தார்.
தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைந்தால் மகளிர் உரிமைத்தொகை ரூ.2,000 ஆக உயர்த்தப்படும் என்ற முதல்வரின் வாக்குறுதியையும் அவர் நினைவூட்டினார். 2030க்குள் மேலும் 7 லட்சம் வீடுகள் கட்டி வழங்கப்படும் என்றும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 100% ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும் என்றும் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, சட்டசபை தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையிலும் தி.மு.க.வினர் தொடர்ந்து மக்களை சந்தித்து வருவதாக கூறினார். வாக்குறுதிகளில் 99% நிறைவேற்றியதை மக்களுக்கு நினைவூட்டி வருவதாகவும், இதைத் தாண்டி தனியாக பிரசாரத்திற்கென செல்ல வேண்டுமா என்று யோசித்து வருவதாகவும் தெரிவித்தார். தி.மு.க. தேர்தல் அறிக்கை விரைவில் வெளியாகும்; அதில் பல முக்கிய அறிவிப்புகள் இடம் பெறும் என்றும் கூறினார். தன் போட்டி தொகுதி குறித்து, கட்சி தலைவர் எந்த தொகுதியை சொல்கிறாரோ அதில் போட்டியிடுவேன் எனவும் அவர் தெரிவித்தார்.




