சென்னை: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். பெண்கள் “தடைகளைத் தகர்த்து தொடர்ந்து முன்னேற வேண்டும்” என அவர் கேட்டுக் கொண்டார்; அந்தப் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் திராவிட மாடல் அரசு துணை நிற்கும் என்றும் கூறினார்.
“வெல்லும் தமிழ்ப் பெண்களே” என அழைத்து பேசிய ஸ்டாலின், பெண்கள் வெற்றிபெற உலகமும் துணை நிற்கும் என்றும், அரசும் ஆதரவாக இருக்கும் என்றும் தனது செய்தியில் குறிப்பிட்டார். இறுதியில் அனைவருக்கும் உலக மகளிர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்தார்.
இதற்கிடையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) வெளியிட்ட அறிக்கையில் தாய்மார்கள், சகோதரிகள், இளம் பெண்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார். பெண்கள் குடும்பத்தின் ஆணிவேராக இருப்பதாகவும், அவர்களின் தியாகத்திற்கு ஈடு இணை இல்லை என்றும் கூறி, ஜெயலலிதா பெண்களுக்காக பல திட்டங்களை கொண்டு வந்ததை நினைவூட்டினார்.
திமுக ஆட்சியில் பாதுகாப்பற்ற சூழ்நிலை மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக குடும்பங்கள் சிரமப்படுவதாகவும், அதனால் பெற்றோர்கள் மற்றும் குடும்பத் தலைவிகளின் கவலை புரிகிறது என்றும் இபிஎஸ் தெரிவித்தார். அதிமுக ஆட்சி அமைந்தால் பெண்களுக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படும்; அது பெண்களின் உழைப்புக்கான அங்கீகாரம் என்றும் கூறினார்.
மேலும், 5 லட்சம் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்றும், பயணம், கல்வி நிலையங்கள் மற்றும் பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்ய தாம் துணை நிற்பதாகவும் அவர் தெரிவித்தார்.




