ஈரான் போர் காரணமாக அந்த நாடு சர்வதேச எண்ணெய் சந்தையிலிருந்து விலகும் சூழல் ஏற்பட்டாலும், உலகளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு உருவாக வாய்ப்பில்லை என்று கேர்எட்ஜ் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. உயர்ந்த கையிருப்பும், வரவிருக்கும் ஆண்டுகளில் உற்பத்தி அதிகமாக இருக்கும் கணிப்பும் இதற்குக் காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிக்கையின் படி, ஈரான் நாளொன்றுக்கு சுமார் 35 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்கிறது. இது 2025ஆம் ஆண்டின் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் சுமார் 4% ஆகும். மேலும் 2025ல் சர்வதேச எண்ணெய் கையிருப்பு சுமார் 850 கோடி பேரல்களாக இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

2026 மற்றும் 2027 ஆண்டுகளில் நுகர்வை விட உற்பத்தி அதிகமாக இருக்கும் என கேர்எட்ஜ் கணித்துள்ளது. இதனால், ஈரானின் வழங்கல் குறைந்தாலும் உலகளவில் ஏற்கனவே உள்ள உபரி கையிருப்பு அந்த இழப்பை ஈடுசெய்யும்; போர் பதற்றத்தால் ஏற்படும் விலை உயர்வையும் கட்டுப்படுத்த உதவும் என அறிக்கை கூறுகிறது.

அதே நேரத்தில், சர்வதேச எண்ணெய் வர்த்தகத்தில் முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நாளொன்றுக்கு சுமார் 2 கோடி பேரல் எண்ணெய் கடத்தப்படுவதாகவும், அந்த வழித்தடம் முடக்கப்பட்டால் மாற்று குழாய் வழிகள் மூலம் சுமார் 42 லட்சம் பேரல் மட்டுமே கொண்டு செல்ல முடியும் என்றும் அறிக்கை எச்சரிக்கிறது. இதனால் பெரிய அளவில் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரட்டை கோபுர தாக்குதல், ஈராக் போர், இஸ்ரேல்–ஹமாஸ் போர், ரஷ்யா–உக்ரைன் போர் போன்ற கடந்த கால நிகழ்வுகள் எண்ணெய் விலையில் கடும் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தியதாகவும் அறிக்கை நினைவூட்டுகிறது. இருப்பினும், தற்போதைய சூழலில் அதிகப்படியான கையிருப்பு இருப்பதால் உலகளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது என கேர்எட்ஜ் தெரிவித்துள்ளது.