புதுடில்லி: மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்பு மற்றும் நடைமுறை விதிமீறல்கள் ஏற்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக, அம்மாநில அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தகவலின்படி, ஜனாதிபதி சமீபத்தில் மேற்கு வங்கத்திற்கு சென்ற போது, கோஷாய்பூரில் நடைபெற்ற பழங்குடியினர் சமூகத்தின் ஆண்டு விழாவில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி முதலில் பிதான்நகரில் நடைபெற இருந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து பின்னர் கோஷாய்பூருக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
நிகழ்ச்சி இடமாற்றம் மற்றும் ஏற்பாடுகள் குறித்து ஜனாதிபதி அதிருப்தி தெரிவித்ததாகவும், பிதான்நகரில் நடந்திருந்தால் அதிக மக்கள் பங்கேற்க முடிந்திருக்கும் என அவர் குறிப்பிட்டதாகவும் செய்தி வெளியாகி அரசியல் சர்ச்சை உருவானது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் மேற்குவங்க அரசை விமர்சித்த நிலையில், முதல்வர் மம்தா பானர்ஜி இது அரசு விழா அல்ல; மாநில அரசு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்கியதாக தெரிவித்தார்.
இந்த பின்னணியில், மத்திய உள்துறை செயலர் கோவிந்த் மோகன், மேற்குவங்க தலைமைச் செயலர் நந்தினி சக்ரவர்த்திக்கு கடிதம் எழுதி, ‘புளூ புக்’ நடைமுறை விதிகள் மீறப்பட்டதா என்பதற்கான விளக்கங்களை கேட்டுள்ளார். ஜனாதிபதி வருகையின் போது முதல்வர், தலைமைச் செயலர், மாநில காவல்துறை டி.ஜி.பி. நேரில் வராதது, சிலிகுரி மேயர் மட்டுமே வரவேற்றது, ஜனாதிபதிக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கழிப்பறையில் தண்ணீர் இல்லாதது, பாதுகாப்பு வாகன பாதையில் குப்பை சிதறிக் கிடந்தது போன்ற குற்றச்சாட்டுகள் இதில் குறிப்பிடப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், ஏற்பாடுகளுக்கு பொறுப்பான டார்ஜிலிங் மாவட்ட கலெக்டர், சிலிகுரி போலீஸ் கமிஷனர், கூடுதல் மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதையும் மத்திய அரசு கேட்டுள்ளது. மாநில அரசு விரைவில் பதில் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




