கோவையில் அரசு நடத்தும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் (PHC) ஒன்றை திமுக நிர்வாகி ஆக்கிரமித்து, தனியார் வீடாக மாற்றியுள்ளதாக பாஜ மாநில முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட வடவள்ளி 36வது வார்டில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், வடவள்ளி பகுதி திமுக பொறியாளர் அணி துணை அமைப்பாளர் என குறிப்பிடப்படும் ஷ்யாம் சுந்தர் குடும்பத்துடன் வசித்து வருவதாக வெளியான தகவலை சுட்டிக்காட்டினார்.
இதை அதிகார துஷ்பிரயோகத்தின் உச்சம் என விமர்சித்த அண்ணாமலை, மகப்பேறு முதல் அவசர சிகிச்சை வரை ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் நம்பும் முக்கிய ஆதாரமாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருப்பதாக கூறினார்.
மேலும், அடிப்படை வசதிகள் குறைவால் அரசு மருத்துவமனைகள் சிரமப்படும் நிலையில், இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் என்ன பதில் கூறப் போகிறார் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
ஆக்கிரமிப்பு குற்றச்சாட்டுக்குள்ளான நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, அந்தக் கட்டடத்தை முழுமையாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என திமுக அரசை அண்ணாமலை வலியுறுத்தினார்.




