ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்த நிலையில், இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா ஈரானுக்கு எதிராக தாக்குதலை தொடங்கியது. இதற்கு ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருவதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு $100-ஐ தாண்டி உயர்ந்துள்ளது.
இந்த போரின் காரணமாக உலகின் முக்கியமான கச்சா எண்ணெய் போக்குவரத்து வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் தாக்கமே விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை பீப்பாய் ஒன்றுக்கு $92.69 ஆக இருந்த விலை, தற்போது $100-ஐ கடந்துள்ளது. 2022க்கு பிறகு முதல் முறையாக கச்சா எண்ணெய் விலை $100-ஐ தாண்டியதாகவும், தற்போது $110-க்கும் மேல் வர்த்தகமாகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
போர் நீடித்தால் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் $150-ஐ தாண்டக்கூடும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இதற்கிடையில் விலை உயர்வால் எழும் கவலைகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமூக வலைதள பதிவில் நிராகரித்தார். ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தல் முடிவுக்கு வந்ததும் எண்ணெய் விலை விரைவாகக் குறையும் என்றும், குறுகிய கால விலை உயர்வு அமெரிக்காவுக்கும் உலகிற்கும் “பாதுகாப்பு மற்றும் அமைதிக்காக செலுத்த வேண்டிய மிகச் சிறிய விலை” என்றும் அவர் கூறினார்.




