அதிமுக எம்.பி. எம். தம்பிதுரை குடும்பத்துடன் தொடர்புடைய கல்வி நிறுவனங்கள் பொது நிலங்களை ஆக்கிரமித்ததாக தொடரப்பட்ட வழக்கில், சம்பந்தப்பட்ட நிலங்களை 12 வாரங்களுக்குள் மீட்க திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோணாம்பேடு கிராம பொது நல சங்கத் தலைவர் ஜி. கருணாநிதி சார்பில், வழக்கறிஞர் எம். புருஷோத்தமன் தாக்கல் செய்த மனுவில், திருவள்ளூர் மாவட்டத்தின் கோணாம்பேடு, நாராயணபுரம் உள்ளிட்ட பகுதிகளில் செயின்ட் ஜோசப் கல்வி அறக்கட்டளைக்கு உட்பட்ட பள்ளிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலை உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அரசு நிலங்களை ஆக்கிரமித்துள்ளதாக கூறப்பட்டது. அந்த அறக்கட்டளையில் தம்பிதுரையின் குடும்ப உறுப்பினர்கள் அறங்காவலர்களாக உள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டது.
வருவாய் பதிவுகளில் நீர் பிடிப்பு மற்றும் ‘கல்லாங்குத்து’ என வகைப்படுத்தப்பட்ட நிலங்களை ஆக்கிரமித்து, மாணவர் விடுதிகள், பயிலகம், துணைமின் நிலையம், கல்லூரி பேருந்துகளை நிறுத்த தனி சாலை போன்றவை அமைக்கப்பட்டுள்ளதாகவும், 2001 முதல் ஆக்கிரமிப்பு தொடர்வதாகவும் மனுதாரர் தரப்பு தெரிவித்தது.
இந்த வழக்கு பிப்.10 அன்று நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், சி. குமரப்பன் அமர்வில் வந்தபோது, அரசு தரப்பு தாக்கல் செய்த சர்வே அறிக்கையில் அதிருப்தி தெரிவித்த நீதிமன்றம், மீண்டும் அளவீடு செய்து இரண்டு வாரங்களில் அறிக்கை தர கலெக்டருக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது.
இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கலெக்டர் தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாகவும், ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட நிலங்களை 12 வாரங்களுக்குள் மீட்க வேண்டும் என நீதிபதிகள் கலெக்டருக்கு உத்தரவிட்டனர்.




