டெஹ்ரான்: ஈரான் தலைநகர் டெஹ்ரானைச் சுற்றியுள்ள முக்கிய எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சில நிலையங்கள் தீப்பற்றி எரிந்து வருவதாகவும், தொடக்கத்தில் ராணுவம் மற்றும் அணுசக்தி தொடர்பான இலக்குகளாக இருந்த தாக்குதல்கள் தற்போது பொருளாதார வளங்களை நோக்கி நகர்ந்துள்ளதாக ஒரு செய்தி சேனல் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

தகவலின்படி, ஷாஹ்ரேய் பகுதியில் உள்ள பெரிய டோண்ட்குயான் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், ஷஹ்ரான் பகுதி எண்ணெய் கிடங்குகள், கூகக் மற்றும் கராஜ்–பர்திஸ் பகுதிகளில் உள்ள எண்ணெய் சேமிப்பு நிலையங்கள் மீது இரவில் தாக்குதல் நடத்தப்பட்டது. டெஹ்ரான் மற்றும் அல்போர்ஸ் மாகாணங்களில் உள்ள நான்கு முக்கிய எரிபொருள் சேமிப்பு கிடங்குகள் மற்றும் ஒரு பெட்ரோலிய பொருட்கள் போக்குவரத்து மையமும் சேதமடைந்ததாக ஈரான் ஊடகங்கள் தெரிவித்தன.

இந்த நிலையங்கள் டெஹ்ரான் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு பெட்ரோல், டீசல் மற்றும் ராணுவ பயன்பாட்டு எரிபொருள் விநியோகத்தில் முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது. சேதம் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகம் தற்காலிகமாக முடங்கியுள்ளதாகவும், போக்குவரத்து, மின்சார உற்பத்தி, தொழில் துறை மற்றும் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதலில் எண்ணெய் கிடங்கு ஊழியர்கள் நான்கு பேரும், பொதுமக்களும் உயிரிழந்ததாக ஈரான் நாட்டு ஊடகங்கள் கூறின. மேலும், தாக்குதலுக்கு உள்ளான எரிபொருள் நிலையங்கள் ஈரானிய புரட்சிகர காவல்படையுடன் தொடர்புடைய ராணுவ வாகனங்கள் மற்றும் ஏவுகணை ஏவு தளங்களை இயக்க பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு பதிலடியாக, இஸ்ரேலின் ஹைபாவில் உள்ள அந்நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. அந்த நிலையம் இஸ்ரேலின் உள்நாட்டு எரிபொருள் தேவையில் 50–60 சதவீதத்தை வழங்குவதாகவும், கடந்தாண்டு ஜூனில் நடந்த தாக்குதலின்போது மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்து 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்து, பல மாதங்கள் செயல்பாடு நிறுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.