மேற்காசிய பகுதியில் உருவாகியுள்ள பதற்ற நிலை குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் திங்கள்கிழமை ராஜ்யசபாவில் விளக்கமளித்தார். அப்பகுதி பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும் என்றும், பதட்டத்தை தணித்து அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு தேட வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தி வருவதாக அவர் கூறினார்.
நிலைவரத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், கச்சா எண்ணெய் விலை உயர்வை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்தார். எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு தொடர்பாக, ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் வழியாக தொடர்ந்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாகவும், அங்கு உள்ள இந்தியர்களின் நலனை பாதுகாப்பதில் அரசு உறுதி பூண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வளைகுடா நாடுகளில் தவித்து வரும் இந்தியர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் மீட்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
ஈரான்-இஸ்ரேல் உள்ளிட்ட மேற்காசிய நாடுகளில் நிலவும் போர் முடிவுக்கு வர வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம் என ஜெய்சங்கர் கூறினார். போர் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சக குழு அதிகாரிகளுடன் ஆலோசனைகள் நடைபெற்றதாகவும், இது சில நாடுகளுக்குள் மட்டுமே சுருங்கிய மோதல் அல்ல; அந்தப் பிராந்தியத்தைச் சுற்றியுள்ள பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வளைகுடா நாடுகளில் கிட்டத்தட்ட ஒரு கோடி இந்தியர்கள் வசித்து வேலை செய்கிறார்கள் என்றும், ஈரானில் படிப்பு அல்லது வேலைவாய்ப்புக்காக சில ஆயிரம் இந்தியர்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அங்கு இந்தியர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை அரசு கவனித்து வருவதாகவும், உரிய நடவடிக்கைகளை எடுக்க சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.




