நாட்டின் கல்வி முறையை காலத்திற்கேற்ப தொடர்ந்து நவீனமயமாக்கி மேம்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி திங்களன்று தெரிவித்தார். உலகப் பொருளாதாரத்தின் தேவைகளுடன் இணையும் வகையில் கல்வி அமைப்பு வளர வேண்டும் என்றும் அவர் கூறினார்.

வளர்ச்சித் திட்டங்களை திறம்பட செயல்படுத்துவது குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பேசிய அவர், நாடு முழுவதும் விளையாட்டு உள்கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். வருங்கால ஆண்டுகளில் இந்தியாவில் நடைபெறவுள்ள பெரிய சர்வதேச போட்டிகள் மற்றும் ஒலிம்பிக்குக்கான தயாரிப்புகளை முன்னிட்டு, இளம் விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு வளர்ப்பது அவசியம் என்றார்.

அரசு தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுகிறது என்றும், சமீப ஆண்டுகளில் சுகாதார உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டதை எடுத்துக்காட்டினார். மேலும் ஏஐ, ஆட்டோமேஷன், டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் போன்ற எதிர்கால துறைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கிராமம்-நகரம் என்ற வேறுபாடின்றி இளைஞர்கள் புதிதாக சாதிக்க விரும்புகிறார்கள்; அவர்களின் விடாமுயற்சி நாட்டின் மிகப்பெரிய பலம் என்று மோடி கூறினார். இந்த திறனை முழுமையாக பயன்படுத்த, கல்வி சீர்திருத்தங்களை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்றும், புதிய கல்விக் கொள்கை அடித்தளத்தை அமைத்துள்ள நிலையில் அதை நடைமுறைப்படுத்துவது இப்போது மிக முக்கியம் என்றும் அவர் தெரிவித்தார்.