தி.மு.க.–காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராகவும், த.வெ.க. உடன் கூட்டணி அமைக்க வேண்டும் என ஆதரவாகவும் பேசிய தமிழக காங்கிரஸ் மாநில, மாவட்ட நிர்வாகிகள் சிலர் கட்சியைவிட்டு வெளியேற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனால் கட்சி இரண்டாகப் பிளவுபடும் சூழல் உருவாகக் கூடாது என்பதற்காக, டில்லி மேலிடப் பார்வையாளர் முகுல் வாஸ்னிக் அதிருப்தியில் உள்ளவர்களுடன் பேசி சமாதானப்படுத்தியதாக கூறப்படுகிறது.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தி.மு.க.–காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற அனைவரும் தேர்தல் பணியில் முழுமையாக ஈடுபட வேண்டும் என முகுல் வாஸ்னிக் வலியுறுத்தினார். சிலர் எதிர்ப்பு தெரிவித்து “ஏதோ செய்யப் போவதாக” தகவல் வருவது நல்லதல்ல என்றும் அவர் கூறியதாக தகவல்.

அதே கூட்டத்தில், வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலுக்கான தொகுதி தேர்வு மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான அணுகுமுறையும் விவாதிக்கப்பட்டது. காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள 42 தொகுதிகளை தேர்வு செய்து, அந்த பட்டியலை தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவிடம் வழங்கி, அதிலிருந்து வெற்றி வாய்ப்பு அதிகமுள்ள 28 தொகுதிகளைப் பெற பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர்.

முகுல் வாஸ்னிக்குடன் உத்தரகண்ட் எம்.எல்.ஏ. குவாசி முகமது நிஜாமுதீன், மேலிட பொறுப்பாளர்கள் கிரீஷ் ஷோடங்கர், நிவேதித் ஆல்வா ஆகியோரும் கலந்து கொண்டனர். தங்கபாலு, திருநாவுக்கரசர், பீட்டர் அல்போன்ஸ், சொர்ணா சேதுராமன் உள்ளிட்ட முன்னணி தலைவர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், முன்னணி அமைப்புகள், வார் ரூம் மற்றும் ஐ.டி. அணி நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

மேலும், முழுநேரமாக கட்சிப் பணியில் ஈடுபட்டோர் மற்றும் போராட்டங்களில் பங்கேற்றோருக்கு முன்னுரிமை அளித்து வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என்றும், காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவோரில் 33% இடங்களை பெண்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கூட்டத்திற்குப் பிறகு, தி.மு.க. உடனான தொகுதி பங்கீடு பேச்சு “சுமுகமாக முடிந்தது” என முகுல் வாஸ்னிக் தெரிவித்ததுடன், தமிழகத்தில் காங்கிரஸ் அரசியல் மற்றும் கொள்கை ரீதியாக வலிமையாக இருப்பதாகவும் கூறினார்.