தவெக தலைவர் விஜயின் மகளிர் சார்ந்த வாக்குறுதிகளுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எதிர்ப்பை தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் இந்த கருத்துகளை முன்வைத்தார்.
இத்தகைய அறிவிப்புகளை தான் “வெறுக்கிறேன், அருவருக்கிறேன்” என்று கூறிய சீமான், இது ஆட்சி முறை அல்ல; “ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்” என்ற விற்பனைத் திட்டம் போலவும், தள்ளுபடி அறிவிப்புகள் போலவும் இருப்பதாக விமர்சித்தார். ஏற்கனவே ரூ.10.5 லட்சம் கோடி கடன் இருப்பதாகவும், ரூ.1 லட்சம் கோடி வட்டி சுமை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தாலிக்கு தங்கம் உள்ளிட்ட பல்வேறு இலவசங்களை தொடர்ந்து அறிவித்தால், கடைசியில் நாடே “ஒருநாள் ஏலத்திற்கு வரும்” நிலை ஏற்படலாம் என அவர் எச்சரித்தார். மதுவை ஒழிக்காமல் சட்டம்-ஒழுங்கு பேசுவது வெறும் பேச்சாகும் என்றும், அது ஏமாற்றுப் பேச்சாகும் என்றும் கூறினார்.
விஜய்க்கு தனித்த தத்துவம், கோட்பாடு அல்லது பாதை இல்லை என்றும் சீமான் குற்றம்சாட்டினார். மகளிருக்கு ரூ.2,500 வழங்கும் வாக்குறுதி திரைப்படக் காமெடி போல ‘ஃப்ளாப்’ ஆகும் என்றும் அவர் விமர்சித்தார். சினிமாவும் சித்தாந்தமும் வேறு; இரண்டையும் குழப்பக் கூடாது என்றும் அவர் கூறினார்.
இலவசம் என்றால் பொருளின் மதிப்பு குறையும் என கூறிய சீமான், அறிவை வளர்க்கும் கல்வியும் உயிரைக் காக்கும் மருத்துவமும் தான் அனைவருக்கும் சமமாக கிடைக்கும் வகையில் இலவசமாக இருக்க வேண்டும் என்றார்.




