லண்டன்: மேற்கு ஆசியாவில் இருந்து கச்சா எண்ணெய் கப்பல்கள் வெளியேறும் ஒரே கடல் பாதையாக குறிப்பிடப்படும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ள நிலையில், அந்நாட்டின் தாக்குதலிலிருந்து தப்பிக்க சில சரக்கு கப்பல்கள் தங்களை சீன தொடர்புடைய கப்பல்களாக காட்டி பயணிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுடன் ஏற்பட்ட போருக்குப் பிறகு, தங்கள் நாட்டை ஒட்டியுள்ள ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதாக அறிக்கை கூறுகிறது. இதனால், கச்சா எண்ணெய் உள்ளிட்ட சரக்குகளுடன் 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சரக்குகளை ஏற்றிச் சென்ற 1,000க்கும் மேற்பட்ட கப்பல்கள் வளைகுடா கடல் பகுதியில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போரில் பயன்படுத்த ஆயுதங்கள் வழங்கி சீனா உதவியதாகக் கூறி, சீனாவுக்கு செல்லும் கச்சா எண்ணெய் கப்பல்களை தாக்க மாட்டோம் என ஈரான் அறிவித்துள்ளது. இதன் பின்னணியில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கப்பல்கள் ‘சீன உரிமையாளர் உடையது’ அல்லது ‘சீன குழுவினர் உள்ளனர்’ என்ற வகையில் தங்களை காட்டி ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இயக்கப்படுவதாக கூறப்படுகிறது.
கப்பல் போக்குவரத்து தகவல்களை ஆய்வு செய்யும் தனியார் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், வளைகுடா பகுதியில் நிலவும் போர் சூழல் காரணமாக சில கப்பல்கள் தங்களை சீனாவுடன் தொடர்புடையவை என காட்டும் தகவல்களுடன் பயணிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் 10க்கும் மேற்பட்ட கப்பல்கள் தங்களின் தானியங்கி கப்பல் அடையாள அமைப்பு (AIS) சிக்னல்களை சீன தொடர்புடையதாக மாற்றியதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ‘சீன உரிமையாளர் கப்பல்’, ‘சீன குழுவினர் பயணிக்கும் கப்பல்’, ‘அனைத்து ஊழியர்களும் சீனர்கள்’ போன்ற தகவல்கள் எழுதப்பட்ட பலகைகளை தாங்கிய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சென்றதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.




