புதுடில்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி, ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தமக்கு ரூ.2,558 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக அறிவித்துள்ளார்.
வக்கீலான சிங்வி, தெலுங்கானாவிலிருந்து காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் ஆண்டு வருமானம் ரூ.374 கோடி எனவும், 2023-24ல் ரூ.333 கோடி, 2020-21ல் ரூ.158 கோடி என கடந்த ஆண்டுகளின் வருமான விவரங்களையும் குறிப்பிட்டுள்ளார்; 2024-25ல் ரூ.374 கோடியாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரமாணப் பத்திரத்தில் வங்கி டெபாசிட், பங்குச் சந்தை முதலீடுகள், வாகனங்கள், நகைகள் உள்ளிட்ட அசையும்/அசையா சொத்துகளின் விவரங்கள் இடம் பெற்றுள்ளன. சிங்வியிடம் ரூ.2.40 கோடி மதிப்பில் நகைகள் இருப்பதாகவும், அவரது மனைவியிடம் ரூ.157.53 கோடி மதிப்பில் நகைகள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், புதுடில்லியில் சிங்விக்கும் அவரது மனைவிக்கும் பெரிய பங்களாக்கள் இருப்பதாகவும், சிங்விக்கு ரூ.353.32 கோடி வங்கிக் கடன் நிலுவை, மனைவிக்கு ரூ.72.99 கோடி தனிக் கடன் நிலுவை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக, வீட்டு உபயோக மின் சாதனங்கள், பர்னிச்சர், கணினி உள்ளிட்ட பொருட்களின் மதிப்பு ரூ.163 கோடி என சிங்வி குறிப்பிட்டுள்ளார். தம்மீது தற்போது வரை எந்தக் குற்றவியல் வழக்குகளும் இல்லை என்றும், ரூ.63 கோடி வருமான வரி பாக்கி இருப்பதாகவும் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.




